கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 5 பேர் காரில் பெரம்பலூர் நோக்கி சேலம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே உத்தமர்கோவில் ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது காருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக காரின் பின்புறம் மோதியது. உடனடியாக காரில் வந்த நபர்கள் மேம்பாலத்திலேயே காரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் காரை பாலத்தின் கீழே எடுத்து வாருங்கள் விசாரணை நடத்துகிறோம் என்று கூறி உள்ளனர். ஆனால் காரில் வந்த நபர்கள் மதுபோதையில் இருந்ததால் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துரகளையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய முயன்றனர். காரில் வந்தவர்கள் தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தகாத வார்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி சரக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் அவர்களை சமாதானம் செய்ய முயன்ற போது மது போதையில் நாங்கள் பத்திரிகையாளர்கள் என தொடர்ந்து ரகலையில் ஈடுபட்டதால் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அவர்களை கைது செய்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய் முயன்றபோது அவர்கள் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். இதனை அடுத்து சமயபுரம் சுங்கச்சாவடி அருகே இருங்களூர் பகுதியில் அவர்களை கைது செய்து கொள்ளிடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த அலாவுதீன், சண்முகவேல், நவீன் குமார், செந்தில் குமார், பாண்டியன் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் ஐந்து பேர் மீதும் ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.