ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறந்த சேவைக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழா திருச்சி பீம நகர் பகுதியில் நடைபெற்றது. ஜே கே சி அறக்கட்டளை மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை வகித்தார். ஜே கே சி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முனைவர் ஜான் ராஜ்குமார் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும் பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும் பசிப்பிணியை போக்க அனுதினமும் அன்னதானமும் உரிமை கோரப்படாத உடலை உரிய மரியாதையுடன் ஆயிரக்கணக்கான அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து மனிதாபிமான சேவையில் ஈடுபட்டு வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு சிறந்த மனிதாபிமான சேவைக்கான சாதனையாளர் -2024 விருதினை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சலாவுதீன், கெளரவ செயலாளர் ஆசிரியர் நடராஜன், மகளிர் பிரிவு தலைவி சகுந்தலா சந்தானகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அனாதை பிணங்கள் நல்லடக்கம் செய்து வருவது குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், சுயநலம் பார்க்காமல் பொதுநலன் சார்ந்து இறுதி சடங்கினை செய்கின்றோம். கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது பல உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம்.மேலும் தனிப்பட்ட முறையில் 25 முறை குருதிக்கொடை வழங்கியும், 3 ஜோடி கண்களை கண்வங்கிக்கு பெற்றுகொடுத்தும், 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டும், வாழ்நாளிற்கு பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என எனது உடலினை தானமாக வழங்க உறுதியேற்று மனைவி மகள் ஒப்புதலுடன் திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்துள்ளேன். மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் மகள் கீர்த்தனா விஜயகுமார் இருவரும் விடுமுறை நாட்களில் இயன்ற அளவு உரிமை கோரப்படாத உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.