திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் இவர், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் எச்டிஎப்சி வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். மேலும் அதே வங்கியின் கிரெடிட் கார்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது நடப்பு கணக்கை வங்கி நிர்வாகம் திடீரென முன்னறிவிப்பின்றி முடக்கியது.
இது குறித்து ஜெகநாதன் விசாரித்த போது, கிரெடிட் கார்டில் பெறப்பட்ட தொகையை செலுத்தாததால் வங்கி கணக்கை முடக்கியதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், ஜெகநாதன் கிரெடிட்கார்டுக் காண தொகையை செலுத்தியுள்ளார். இது தொடர்பான ஆவணங்களுடன் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாயத் தலைவர் ஆர்.காந்தி, உறுப்பினர்கள் சாய்ஈஸ்வரி, எஸ்.செந்தில்குமார் உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தனர். அதில் மனுதாரர் தொகை செலுத்தி அதற்கான ஆவணங்கள் சரியாக இருந்த நிலையிலும், வங்கி நிர்வாகம் அவரது கணக்கை முடக்கியது தவறு என்றும், அதற்காக வங்கிக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதிக்கப் படுவதாகவும், அந்த தொகையை ஜெகநாதனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர். மேலும் வழக்கு செலவுக்காக ரூபாய் 5000 செலுத்தவும் உத்திரவிடப்பட்டது.