மலேசியா நாட்டில் வசிக்கும் பிரித்திகா பாண்டிச்சேரியில் சிகிச்சைக்காக அவரது தந்தை சந்திரன், தாய் வனிதா மற்றும் உறவினர்களுடன் மலேசியாவில் இருந்து விமான மூலம் திருச்சி வந்தனர். இவர்கள் கார் மூலம் பாண்டிச்சேரிக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் தரிசனம் செய்துவிட்டு பின்னர் அக்கரை பட்டியில் உள்ள சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்த பின்னர் சுங்கச்சாவடி அருகே உள்ள கௌரி பார்வதி பவன் என்ற ஹோட்டலில் உணவு அருந்திவிட்டு கார் மூலம் காரைக்குடியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்போது சந்திரன் கைப்பையை ஹோட்டலில் விட்டு வந்ததை அறிந்து உடனே சுங்கச்சாவடி அருகே உள்ள ஹோட்டலுக்கு சென்று மேலாளிடம் கேட்டபோது தனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சந்திரன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சமயபுரம் காவல் ஆய்வாளர் சாந்தி மற்றும் போலீசார் கௌரி பார்வதி பவன் ஹோட்டல் சென்று சிசிடிவி-யை ஆய்வு செய்தனர். அதில் அந்த உணவகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றிய அலமேலு அவரது கணவர் அலெக்ஸ் இருவரும் பையை திருடியது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த கைப்பையில் இருந்த மலேசியா பணம், 4 கிராம் தங்க செயின் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து திருடிய பணம் நகை பாஸ்போர்ட்டை கேட்டபோது பணம், நகையை மட்டும் கொடுத்துள்ளனர் பாஸ்போர்ட்டை எரித்து விட்டதாக தெரிவித்தனர். சமயபுரம் போலீசார் அலெக்ஸ் மற்றும் அவரது மனைவி அலமேலு இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து திருச்சி நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த உணவகத்தில் அடிக்கடி திருட்டு நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களே திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த உணவகத்தின் மேலாளர்க்கும் திருடுவதற்கு உடந்தையாக இருப்பாரோ என்று சமூக ஆர்வலர்களுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.