முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி., மீதான பாலியல் புகார் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா மக்களவை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி சார்பில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்ததும் அவர் ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியினர், மகளிர் அமைப்பினரும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பிரஜ்வால் ரேவண்ணாவின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று தமிழக மகிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவி ஹசினா சையத் தலைமையில் பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பிய பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி அருணாச்சலம் மன்ற அலுவலக முன்பு இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவி சீலாசலஸ், மாநில நிர்வாகி ஜெகதீஸ்வரி, மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி
னர்.