திருச்சி, இ.பி ரோடு, கருவாட்டுப் பேட்டையை சேர்ந்தவர் பரணி என்கிற பரணி குமார் (வயது 28). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கோட்டை காவல் நிலையம், பாலக்கரை காவல் நிலையம், காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில், திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும், திருச்சி கோட்டை ரயில் நிலையம் குட்ஷெட் பகுதியை சேர்ந்த மதன் என்பவருடைய மனைவி ஜோதி என்பவருக்கும், பரணிக்குமாருக்கும் தகாத உறவு ஏற்பட்டது.கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜோதிக்கு (வயது 45), பரணிக்குமார் 3 வது கணவன். வழக்கொன்றில் சிக்கி சிறையில் இருந்த பரணிக்குமார், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து திரும்பியுள்ளார். அன்று முதல், பரணிகுமாருக்கும் ஜோதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் , வழக்கம்போல் இருவருக்கும் நேற்று நள்ளிரவு தகராறு நடந்துள்ளது. ஆத்திரமடைந்த பரணிக்குமார் ஜோதியை அடித்து, உதைத்துள்ளார்.இதனைக் கண்ட ஜோதியின் மகன் மாதேஷ் (வயது 17) மற்றும் அவனது நண்பன் பீமநகரை சேர்ந்த டோலு என்கிற முகமது தெளபீக் (வயது 19) ஆகிய இருவரும் சேர்ந்து, சிங்காரத் தோப்பு அருகே நின்றிருந்த பரணிக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
பரணிக்குமார் இவர்களை சரமாரியாக தாக்கவே, ஆத்திரமடைந்த இருவரும் தங்களது கையில் வைத்திருந்த கல்லால் மண்டையில் சரமாரியாக தாக்கினர். மேலும், கத்தியால் குத்தியதாலும் சம்பவ இடத்திலேயே பரணிக்குமார் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கோட்டை காவல் நிலைய போலீசார், பரணிக்குமார் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து தப்பியோடிய மாதேஷ், டோலு ஆகிய இருவரையும் தேடிவந்த நிலையில் இன்று இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரின் மீதும், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் கோட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.