தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூரிய வெளிச்சம், தூசி மற்றும் மாசு ஆகியவற்றை கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பல்வேறு கண் பாதிப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகும் வாய்ப்புள்ளது. குறிப்பாக கோடைகாலத்தில் உலர்ந்த கண்கள், புற ஊதா கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் கண் காயங்கள் ஆகியவை பொதுவாக அதிக அளவில் ஏற்படுகிற நோய்களாக இருக்கின்றன. இது போன்ற நேரங்களில் சூரியனின் கதிர்வீச்சு ஒவ்வாமைகள் மற்றும் காயங்களில் இருந்து கண்களை பாதுகாப்பது மிக முக்கியமானது என திருச்சி தில்லைநகரில் அமைந்துள்ள வைஷாலி மருத்துவமனையில் இயங்கி வரும் துருவ் ஐ கேர் மருத்துவர் வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவர் வைஷ்ணவி கூறுகையில்….

தற்போது கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. முற்காலத்தில் இருந்ததை விட தற்போது சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களின் கதிர்வீச்சும் அதிகமாக உள்ளது. இதனால் நமது கண்ணிற்கு இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. முதலாவதாக அதிகமான புற ஊதா கதிர்வீச்சினாலும், சூரிய ஒளியை அதிகமாக பார்ப்பதாலும் கண்ணில் புரை ஏற்படும். இரண்டாவதாக இந்த கதிர்வீச்சினால் கண் விழித்திரையில் உள்ள அணுக்கள் கொஞ்சம், கொஞ்சமாக நசுங்கி பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு முற்காலத்தில் அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள், கடலில் மீன் பிடிப்பவர்கள், வயல் வெளியில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்டது. தற்போது கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் சாதாரண மனிதர்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நாம் சில விஷயங்களை கடை பிடிக்க வேண்டும். பகல் நேரத்தில் வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். சாதாரண கருப்பு கண்ணாடி அணியாமல், புற ஊதா கதிர்வீச்சுகளை குறைக்ககூடிய வகையில் உள்ள கண்ணாடிகளை அணிய வேண்டும். வெயில் நேரடியாக கண்ணில் படாமல் இருக்க தொப்பி அணிந்து கொள்வது நல்லது. மேலும் இந்த காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் அனைவரும் வெளியில் சென்று விளையாடாமல் வீட்டிற்குள்ளேயே அமர்ந்து டிவி பார்ப்பது, செல்போன் உபயோகிப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.

தற்போது அதிகளவிலான குழந்தைகள் கண்ணாடி அணிகின்றனர். தினமும் பள்ளிக்கு சென்று நான்கு சுவற்றுக்குள் படித்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடம் எழுதுகின்றனர். வெளியில் சென்று விளையாடுவது குறைகிறது. குழந்தைகள் தினமும் ஒன்றரை மணி நேரமாவது மைதானத்தில் விளையாடுவது நல்லது. மற்ற நேரங்களில் கிட்டப்பார்வை அல்லாத விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது நல்லது. மேலும் கண்ணாடி அணியும் குழந்தைகள் கண்டிப்பாக கண்ணாடி அணிவது அவசியம். வளரும் வயதில் குழந்தைகள் கண்ணாடி அணிவது மிக முக்கியம். குழந்தைகளுக்கு கண்ணாடி பவர் இருந்தால் அவர்கள் கண்ணாடி அணிவதை ஒரு வியாதியாக நினைக்காதீர்கள். அவர்கள் கண்ணாடி அணிந்தால்தான் அவர்களுக்கு பார்வை தெளிவாக தெரியும். குறிப்பாக 8, 9 வயதுள்ள வளரும் குழந்தைகள் கண்ணாடி பவர் இருந்து, கண்ணாடி அணியாமல் இருந்தால் அவர்களுக்கு அந்த பவரை நாம் திருப்பி அளிக்க முடியாமல் போய்விடும். அதனால் சரியான நேரத்தில் அவர்களுக்கு உண்டான கண்ணாடி பவரை கண்டறிந்து கண்ணாடி அணிவதை ஊக்கப்படுத்துங்கள். அது ஒரு வியாதி என்று கவலை பட வேண்டாம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்