ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி திருச்சியில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு கடந்த ஆண்டு 140 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து விட்டு, எந்த விவாதங்களுமின்றி மூன்று குற்றவியல் சட்டங்களை நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியது. பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் என்று சமஸ்கிரதத்தில் பெயரிடப்பட்ட அந்த சட்டங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைப் படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அந்த சட்டங்கள் அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு நாட்டின் செல்வங்களை ஒப்படைக்கும் போது, அதற்கு தடையாகவும், ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்துபவர்களை நசுக்குவதற்கு ஏதுவாக, தடா, பொடா,உஃபா சட்டங்களின் கூறுகளை கொண்டதாக உள்ளது.
மேலும் அச்சட்டடங்கள், மக்களாட்சியின் மாண்பையும், மனித உரிமைகளையும் பறிக்கும் விதமாகவும், நீதித்துறையின் அதிகாரங்களை பறிக்கும் விதமாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும் உள்ளது.மக்கள்விரோத இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி ,திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக திருச்சி மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூன்று சட்டங்களும் பாஜகவின் பாசிச கொள்கையை நடைமுறைப்படுத்தும் விதமாகவும், பிரிட்டீஷ் காலணியாதிக்கத்தை மீண்டும் அமல்படுத்தும் விதமாகவும் உள்ளது. எனவே இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. அவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பினார்கள்.