சர்வதேச திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் கடத்தல் தங்கம் பிடிபடுவது வாடிக்கையாக உள்ள நிலையில், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் பயணி ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டதன் பேரில் அவரை தனியே அழைத்து சோதனை செய்தனர். அந்த ஆண் பயணி தனது மலக்குடலில் பேஸ்ட் வடிவில் 657 கிராம் தங்கத்தையும், துணிகளில் 95 கிராம் தங்க செயினையும் மறைத்து வைத்திருந்ததை கண்டறிந்தனர். பயணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 752 கிராம் மற்றும் இதன் மதிப்பு 54.36 லட்சம் என கண்டறியப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதில், அவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரது மகன் சலீம் என தெரியவந்தது.