ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் கட்டுமான துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணைச் செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் முருகதாஸ், ஜெயராம், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் சுதர்சன ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-
ஒன்றிய அரசின் நிதியை தமிழக கட்டுமானத் துறைக்கு கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், கட்டுமான பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைத்திட வேண்டும், கட்டுமான பொறியாளர்கள் வாழ்வாதாரம் காத்திட பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும், கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவீதமாக குறைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.