திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகள் மற்றும் உள்ளூர் விமான சேவை நடைபெற்று வருகிறது. இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் விமான பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்றாலும், திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் கொண்டுவரும் விமான பயணிகள் பிடிபடுவது வாடிக்கை. இந்த நிலையில், கோலாலம்பூரில் இருந்து ஏர் ஆசியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்து அடைந்தது. அந்த விமான பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்குத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த பெண் பயணி ஒருவரை அழைத்து அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அவரது உடைமைகளில், 22 கேரட் மற்றும் 24 கேரட் தூய்மையான தங்கம் சுமார் 2,291 கிராம் இருந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூபாய் 1.53 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடத்தல் தங்கத்திற்கு சுங்க வரி செலுத்துவதை தவிர்க்கும் நோக்கத்துடன் சுங்கத்துறைக்கு அறிவிக்காமல் அதை கடத்த முயன்ற பெண் பயணியின் பாஸ்போர்ட்டை சரி பார்த்ததில் அவர் தங்கத்தை இறக்குமதி செய்ய தகுதியான பயணி இல்லை என்பது தெரிய வந்தது. , அவரிடம் இருந்த 2,291 கிராம் எடையுள்ள 1.53 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பெண்மணி கைது செய்யப்பட்டு, விசாரணையானது நடைபெற்று வருகிறது.