வங்கக் கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நெடுந்தீவு, கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைதுசெய்வதையும், மீனவர்களின் படகு மீது தங்களின் ரோந்து கப்பலை மோதவிட்டு மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது அல்லது மூழ்கடிப்பதையும் தீவிரப் படுத்தியிருக்கிறது இலங்கை கடற்படை. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் படகுகளும் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளது. மேலும், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்படாமல் தொடர்ந்து வருகிறது. சொந்த நாட்டு குடிமகனின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் முக்கிய கடமையாகும்.
ஆனால், தமிழக மீனவர்கள் விசயத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுகின்றன என்பதையே நடக்கும் நிகழ்வுகள் உறுதிப் படுத்துகின்றன. இதனால் தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. தற்போது இலங்கையில் 100க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிறைகளில் உள்ளதாகவும், 175 மீன்பிடி விசைப்படகுகளும் சிறைபிடிக்கப் பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்காது வேடிக்கை பார்ப்பதன் மூலம் மீனவர்களை மூன்றாம் தர குடிமக்களாக மத்திய, மாநில அரசுகள் பார்க்கிறதா என்ற சந்தேகம் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு நிர்பந்ததை கொடுக்கும் வகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிங்கள நிறுவனமான தம்ரோ (Damro) பர்னிச்சர் விற்பனை நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டத்தை எஸ்டிபிஐ., மே17 இயக்கம், தமஜக உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் நடத்தி வருகின்றன.
அதனடிப்படையில், இன்று திருச்சியில் உள்ள தம்ரோ (Damro) பர்னிச்சர் விற்பனை நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமஜக தலைவர் கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மண்டலத் தலைவர் ஹஸ்ஸான், திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் தமீம், வடக்கு மாவட்டத் தலைவர் ஜவஹர் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், மே17, தமஜக உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முற்றுகையில் கலந்துகொண்டவர்கள் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இறுதியாக முற்றுகையில் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.