திருச்சி கே. சாத்தனூரை சேர்ந்த கருப்பையா என்பவர் கடந்த 17.06.2021 அன்று டாட்டா ஏசி வண்டியில் உடையான் பட்டி ரயில்வே கேட் பிள்ளையார் கோயில் அருகே சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூபாய் 5500/- பணத்தை கத்தியை காட்டி மிரட்டி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கருப்பையா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ரவுடி சாமி ரவி மீது கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை விசாரித்த கே.கே நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கே.கே நகரை சேர்ந்த ரவி (எ) சாமி ரவியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் வழக்கில் சம்மந்தப்பட்ட ரவி (எ) சாமி ரவி, என்பவர் மீது ஏற்கனவே திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல்நிலையத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஒரு கட்சியினரால் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த பணத்தை கூட்டு கொள்ளையடிக்க மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி என பதிவு செய்யப்பட்ட வழக்கு,திருச்சி மாநகரம், கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஆட்கடத்தல் வழக்கும், தில்லைநகர் காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், மணிகண்டம் காவல்நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கொள்ளை வழக்குகளும்,கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் கொலை வழக்கும், பாண்டிச்சேரி காரைக்கால் காவல்நிலையத்தில் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது தெரிய வந்தது.
எனவே ரவுடி ரவி (எ) சாமி ரவியை தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் கே.கே.நகர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் அவர்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள்குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து இன்று (08.07.2021) புதுக்கோட்டை சிறையில் இருந்து வரும் ரவி (எ) சாமி ரவி என்பவருக்கு குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.