இறைத் தூதரான நபிகள் நாயகம் அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய வரலாற்றுப் பெருமைமிக்கவர். நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள், மீலாது நபி திருநாளாக உலகம்முழுவதும் வாழ்கிற இஸ்லாமிய பெருமக்களால் மிகுந்தமகிழ்ச்சியுடன் கொண்டாடப் படுகிறது. இறைவனை வணங்கி மகிழவும், பிற சமூகங்களோடு இணங்கி வாழவும், எளியமக்களுக்கு உதவி செய்து வாழவும், சமூக ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் கோட்பாட்டை வலியுறுத்தும்விதமாக திருச்சியில் தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நபிகள் புகழ்பாடும் மிலாதுன் நபி பேரணி நடைபெற்றது. நத்தர்வலி தர்காவில் இருந்து துவங்கிய இப்பேரணியானது இப்ராகிம் சாலை, மேலபுலிவார் ரோடு, காந்தி மார்க்கெட் சாலை, மணிக்கூண்டு சாலை வழியாக மீண்டும் நத்தர்வலி தர்காவை வந்தடைந்தது. 350 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் பங்கேற்று, நபிகள் புகழ்பாடும் முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.
முன்னதாக இப்பேரணியை தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன், மாநில பொதுச் செயலாளர் லியாகத் அலி ஆகியோர் தலைமையில், மாநில பொருளாளரும் நத்தர்ஷா தர்காவின் தலைமை அறங்காவலருமான அல்லாபக்ஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தமிழகதர்காக்கள் பேரவை முதன்மைச் செயலாளர் ஜுபேருதீன், மாவட்டத் தலைவர் எம்ஐடி சாகுல்ஹமீது, மக்கள்தொடர்பாளர் இப்ராகிம் ஷேக், மாவட்ட துணைத்தலைவர்கள் ரஹ்மத்துல்லா, ஆட்டோஅன்சாரி, தர்காசர்தார், மாநிலதுணைச்செயலாளர் சையது அபுதாகிர், முதன்மைச்செயலாளர் கல்லணை ராஜாமுகமது, மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர் ஆட்டோபாஷா, மாநகர நிர்வாகிகள் ரப்பானி, அப்துல் மாலிக், மாவட்ட செயலாளர் அப்துல் ரஜாக், அப்பாகுட்டி, மகளிர்பேரவை பரக்கத்நிஷா, பூக்கொல்லை ஷமீம்பானு, காஜாபேட்டை ஆமினாபீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.