திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் 1999 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி “வேர்களை நோக்கி” என்ற தலைப்பில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 1992 முதல் 1999 வரை பள்ளியில் பணியாற்றிய 30 ஆசிரியர்கள் மற்றும் சுமார் 70 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள பல மாணவர்களும் காணொலி காட்சி மூலம் இணைந்தனர். நிகழ்ச்சியை தற்போதைய தலைமை ஆசிரியர் சைமன் சுகுமார் தொடங்கி வைத்தார். முன்னாள் ஆசிரியர்கள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து மாணவர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மாணவர்கள் தற்போதைய தொழில் நிலை மற்றும் பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். டாக்டர் ஜெரால்டு மற்றும் சம்சுதீன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
கடந்த 25 ஆண்டுகளில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. மாணவர்கள் ஒவ்வொரு ஆசிரியருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளியின் ஏழை மாணவர்களின் காலை உணவு மற்றும் கல்வி கட்டணித்திற்கான காசோலையை சாமுவேல் ஃபெலிக்ஸ் மற்றும் அரவிந்த் ஆகியோர் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.