திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புங்கனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக கிராமங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. குடியரசு தினம், மே தினம், காந்தி ஜெயந்தி, சர்வதேச தண்ணீர் தினம், சுதந்திர தினம் மற்றும் உள்ளாட்சி தினங்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த நவ.1ல் உள்ளாட்சி தினத்தையொட்டி நடக்க இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
அதற்கு பதிலாக இக்கூட்டம் திருச்சி புங்கனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் துவங்கியது. பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சி வளர்ச்சி குறித்து கருத்துக்களை தெரிவித்தனர். இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஊர் நல அலுவலர் இந்திரா கலந்து கொண்டார். மேலும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) ஆரோக்கியராஜ் ஆனந்த் செய்திருந்தார்.