திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும். இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 775 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். முதலாவதாக ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு முறையாக ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் அருள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் டிவி, மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்க காசு, வெள்ளி காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு வீட்டுமனையும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.முன்னதாக கால்நடை மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா, ஜல்லிக்கட்டு போட்டிக்கு கலந்து கொள்வதற்கு உரிய உடல் தகுதி உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் போதை பொருட்கள் உட்கொண்டு உள்ளார்களா என்ற பரிசோதனையும், ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைபவர்களுக்கு உடனடியாக முதல் கட்ட சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருவெறும்பூர் டிஎஸ்பி தலைமையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சூரியூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேரில் கண்டு களிக்கும் விதமாக கேலரிகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வம் கொண்டவர். அதன் காரணமாக சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியையும் காண வந்துள்ளார். ஜல்லிக்கட்டு தமிழர்களின் விழா அவருடன் இணைந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தது மகிழ்ச்சி தான். சூரியூரில் 3 கோடி ரூபாய் செலவில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுகள் விளையாடும் வகையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடலாக அது இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *