தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வலியுறுத்தி ஏ ஐ டி யு சி சம்மேளனம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கண்டோன்மென்ட் புறநகர் போக்குவரத்து கிளை முன்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமை தாங்கினார். சம்மேளன நிர்வாகிகள் ராஜேந்திரன், துரை, மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ ஐ டி யு சி தேசிய செயலாளர் மூர்த்தி, தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக தமிழக அரசு பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை காரணம் ஏதும் கூறாமல் உடனடியாக பேசி முடிக்க வேண்டும் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசே வழங்க வேண்டும்
காலியாக உள்ள 25,000 மேற்பட்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடுகள் செய்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வினை உடனடியாக நிலுவையுடன் வழங்க வேண்டும் தனியார் மயப்படுத்தும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், மாவட்ட தலைவர் நடராஜா, சம்மேளனத்தின் துணை பொதுச்செயலாளர்கள் செல்வராஜ், முருகராஜ், சுப்பிரமணியன், பாஸ்கரன், ஓய்வு பெற்றோர் சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் நந்தாசிங் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.முடிவில் மாநில பொருளாளர் நேருதுரை நன்றி கூறினார்.