தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது. அந்த நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கேட்டால் தேசிய கல்விக் கொள்கையையும் மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு வற்புறுத்தி வருகிறார்கள். இதனை கண்டித்து கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், முற்போக்கு அமைப்புகள், மாணவ அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடிய பொழுது தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாட்டு எம்.பிக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்பிக்களையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் அவர்களை நாகரீகமற்றவர்கள் எனவும் தமிழ்நாட்டு முதலமைச்சரை கேலியாகவும் விமர்சனம் செய்து பேசினார். இது நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்நாடு எம்பிக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு மக்களும் தர்மேந்திர பிரதானம் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு மக்கள் குறித்து இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பாக நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசையும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் கண்டித்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். தர்மேந்திர பிரதானி புகைப்படத்தை கிழித்து எரிந்தனர். திமுக மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் திமுக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.