திருச்சி, அண்ணா அறிவியல் மையம், கோளரங்கத்தில், வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்து வேடிக்கை அறிவியல் காட்சி கூடத்தினை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, ஆட்சியர் சரவணன், மேயர் அன்பழகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். காட்சிக்கூடத்தை திறந்து வைத்த பின்னர் நகராட்சி நிருவாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில் …
சமிபத்தில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய், “திருச்சியில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சி மாவட்டம் வளரவில்லை” என குற்றம்சாட்டி திருச்சியில் பிரச்சாரம் செய்தார். அந்த குற்றச்சாட்டுக்கு பதில்தந்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் … திருச்சி எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பது குறித்து திருச்சியில் உள்ள திருச்சியில் வாழக்கூடிய பொதுமக்களுக்கும் தெரியும். நான்கரை ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை திருச்சியில் நிறைவேற்றி உள்ளோம். வெளியிலிருந்து வந்தவர்களுக்கு அது தெரியாது.
தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் உருவானாலும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் மீண்டும் (இரண்டாவது முறையாக) முதல்வராக உறுதியாக பொறுப்பேற்பார். வெளிநாட்டு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருச்சி மணப்பாறையில் ஜெபல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தங்களுடைய தொழிற்சாலையை தொடங்க இருக்கிறார்கள். அந்த தொழிற்சாலை தொடங்கிய பின்பு வேலைவாய்ப்பு பெருகும் திருச்சியின் முகமே மாறிவிடும்.புதிய கட்சி தொடங்குபவர்களில் இருந்து அனைத்து கட்சியினரும் திமுகவை விமர்சிப்பது ஏன் என்கிற கேள்விக்கு…மொட்டைமரம் கல்லடிப்படாது. காய்த்த மரம் தான் கல்லடி படும். திமுக ஒரு காய்த்த மரம் என பதிலளித்தார்.