அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்கி, ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். முறையாக ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்லிகாபேகம் தலைமை தாங்கினார்.
பொருளாளர் ராணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சித்ரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி நன்றிகூறினார். ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.