வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த நான்காம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், இதே நிலை தமிழகத்தில் வரும் அபாயம் உள்ளது. எனவே எஸ்.ஐ.ஆரை ஒரு மாத கால அவகாசத்தில் மேற்கொள்ளக் கூடாது.

தேர்தல் முடிந்த பின்பு கால அவகாசம் எடுத்து அதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திமுக திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், முஸ்லீம் லீக், விசிக, மதிமுக, ம மக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

எம்எல்ஏக்கள் சவுந்தர பாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார் ஆகியோர் உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திருச்சி எம் பி துரை வைக்க உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றுகின்றனர். ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியும் எஸ் ஐ ஆர் ஐ உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

