தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமை அலுவலகம் முன் நடந்த வாயிற் கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்டத் தலைவர் நடராஜன் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக தமிழ்நாடு மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை முறையாக நிரப்பாமல் (மேன் பவர் கார்ப்பரேஷன்) ஒப்பந்ததாரரின் மூலம் வேலைக்கு ஆள் எடுக்கும் வழிகாட்டி நெறிகளை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்த காலம் முடிந்த 23 மாதங்கள் கடந்த பிறகும் ஊதிய உயர்வு கிடைக்குமா? இல்லையா? என்ற நிலைக்கு தீர்வு காண வேண்டும். ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். கிளாஸ் -I, II உட்பட அனைவருக்கும் பிரித்தாளும் முறையை கைவிட்டு ஒன்றாக வழங்க வேண்டும்.மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க ஒரு லட்சம் கோடிகளை, கொடுத்து நிர்பந்தப்படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மாநில அரசின் கீழ் மின் வாரியங்களை செயல்படுத்த நிதி உதவி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் பழனியாண்டி, எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் சிவசெல்வம், இன்ஜினியர் சங்க திருச்சி மண்டல செயலாளர் நரசிம்மன், வட்ட செயலாளர் சங்கர் கணேஷ், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாவட்ட தலைவர் ஆலயமணி, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில செயலாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செந்தில் நன்றி கூறினார்.
