தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு திருச்சி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழா நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு, அரசு உதவி மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் குழந்தைகள் தினமான இன்று சிவகங்கை மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான அரசு, அரசு உதவி மற்றும் பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை குழந்தைகள் தினமான 14.11.2025 இன்று திருச்சிராப்பள்ளி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழா நிகழ்வில் தமிழக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என் நேரு மாணவ. மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 103 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 67 அரசு உதவி, பகுதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.10.89 கோடி மதிப்பீட்டில் 11ஆம் வகுப்பு பயிலும் 10345 மாணவர்கள் மற்றும் 12243 மாணவிகள் என மொத்தம் 22588 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 962 மாணவர்கள், 1643 மாணவிகள் என மொத்தம் 2605 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கிடும் வகையில் இன்று நடைபெற்ற விழாவில் 970 மாணவ, மாணவிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் திரு.கே.என் நேரு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மதுபாலன். முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மெதடிஸ்ட் பள்ளி தலைமையாசிரியர் லதா மேரி ஷெலீன் , நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்