ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலாம் புறப்பாடாக உற்சவர் நம்பெருமாள் காலை 8 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாள் காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதனை தொடர்ந்து நம்பெருமாள் சொக்கப்பனை கண்டருள மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் முன் கோவில் தங்க கொடிமரம் அருகே உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

இடைவிளக்கு எடுத்த உத்தமநம்பி சுவாமிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை, மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் 2ம் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கோபுரத்திற்கு முன்னாள் 20அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே காத்திருக்க இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. நம்பெருமாள் சொக்கப்பனை தீபத்தை கண்டருளிய பின்னர் நந்தவனம் தோப்பு வழியாக தாயார் சன்னதிக்கு சென்றார். அங்கு நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து திருக்கைத்தல சேவைக்கு பிறகு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.15க்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் சிவராம்குமார், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
