திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். ஸ்ரீரங்கம் பகுதிக்கு என்று தனியாக பேருந்து நிலையம் இதுவரை இருந்ததில்லை . முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது கூட அங்கு பேருந்து நிலையம் கட்டப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலகம் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்டுவது என தீர்மானித்து பணிகள் துவங்கி தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த புதிய பேருந்து நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் முதல் தளத்தில் திருமண மண்டபம் ஆகியவற்றை தமிழக அரசு கட்டியுள்ளது.

பேருந்து நிலையத்திற்கு பார்க்கிங் வசதி எதுவும் இல்லை. அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் புதிய பேருந்து நிலையம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ளது எப்பொழுதும் ஹார்ன் சத்தத்துடன் அதிக ஒலி இப்பகுதியில் ஒலித்துக் கொண்டே இருக்கும் இது நோயாளிகளை பெரிதும் பாதிக்கும். மேலும் பேருந்து நிலையம் கட்ட சொன்னால் அரசு வணிக நோக்கத்துடன் இங்கு கடைகளை கட்டி இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளது பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் திருமண மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஹால் கட்டியுள்ளனர் இது முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடன் மட்டுமே செயல்படும்.

மேலும் ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அடிமனை பிரச்சனை காரணமாக தங்களது வீடுகளை இடித்து கட்டுவதற்கோ அல்லது புதுப்பித்து கட்டுவதற்கோ வீடுகளின் பெயரில் வங்கிகளில் கடன் பெறுவதற்கோ முடியாத சூழ்நிலை உள்ளது. இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதே அடிமனை பிரச்சனை தொடர்புடைய இடத்தில் அரசு மட்டும் அந்த இடத்தை இடித்து புதிய பேருந்து நிலையம் கட்டுவது எப்படி…. அரசு பேருந்து நிலையம் கட்ட முடியும் என்றால் ஸ்ரீரங்கத்தில் வாழும் பொதுமக்களும் தங்களது இடங்களை இடித்து வீடு கட்டவோ புதுப்பித்து கட்டவோ வங்கிகளில் கடன் பெறவோ அரசு வழிமுறை செய்ய வேண்டும் இல்லை என்றால் அதுவரை இந்த புதிய பேருந்து நிலையத்தை திறக்க விடமாட்டோம் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்தனர்.
