திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை நவீன முறையில் நீக்கும் வகையில், ரூபாய் 3.78 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள புதிய “சூப்பர் சக்கர் மற்றும் மறுசுழற்சி வசதி கொண்ட ஜெட்டிங் வாகனம்” (Super Sucker Cum Jetting with Recycling Facility Vehicle) செயல்பாட்டினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ள இந்த வாகனம், 13,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது. கழிவு பாதைகளில் உள்ள கடினமான அடைப்புகளை அதிவேக அழுத்தத்துடன் நீக்கும் திறன் கொண்டது. குறிப்பாக, சாக்கடை நீரை உறிஞ்சி அதிலுள்ள குப்பைகளைப் பிரித்துவிட்டு, நீரை மீண்டும் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இதில் உள்ளது.

இந்த வாகனத்தின் மூலம் மனிதர்கள் கழிவு பாதைகளில் இறங்கி வேலை செய்யும் முறை முற்றிலும் தவிர்க்கப்படும். தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பணிகளை விரைவாகவும், சுகாதாரமான முறையிலும் முடிக்க இந்த வாகனம் பெரிதும் பயன்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
