திருச்சி மாநகராட்சியில் போகி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பது குறித்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திருச்சி பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையத்தில், போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வுப் பாடல்களுக்கு அட்டகாசமாக நடனமாடினர். பயணிகளையும், பொதுமக்களையும் கவர்ந்த இந்த நடனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எளிமையாக விளக்கியது.

குறிப்பாக போகி பண்டிகை காலத்தில் பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேவையற்ற துணிகளை எரிப்பதைத் தவிர்க்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. தேவையற்ற பழைய பொருட்களைத் தீயிட்டு எரித்து காற்று மாசுபாட்டை உருவாக்க வேண்டாம். உங்கள் வீடுகளுக்கே நேரடியாக வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் பழைய பொருட்களை எரிக்காமல் ஒப்படைக்க வேண்டும். புகையில்லா போகியைக் கொண்டாடுவதன் மூலம் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சுவாசப் பாதிப்புகளைத் தடுக்கலாம் என்ற வேண்டுகோளை வைத்தனர். “சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் – புகையில்லா போகியைக் கொண்டாடுவோம்!” என்ற முழக்கத்துடன் திருச்சி மாநகராட்சி இந்த விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சண்முகம், நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, சுகாதார ஆய்வாளர் வினோத் கண்ணா, உள்ளிட்ட சுகாதார அலுவலர்கள் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
