தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தலைமையில் ‘திராவிட பொங்கல்’ விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், திராவிட கலாச்சாரத்தையும் போற்றும் வகையில் பாரம்பரிய கலைகளால் களைகட்டிய விழாவின் முக்கிய அம்சமாகத் தமிழகத்தின் வீரக் கலைகளும், நாட்டுப்புறக் கலைகளும் இடம்பெற்றன. மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், ஆகிய பாரம்பரிய நடனங்கள் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளித்தன.

தாரை தப்பட்டை முழங்க, விழா மேடை முழுவதுமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. இந்த திராவிட பொங்கல் விழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திராவிடப் பண்பாட்டின் அடையாளமாகச் சாதி, மத பேதமின்றி மக்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி இந்த விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து உழவர் சந்தை மைதானம் மற்றும் கி.ஆ பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அருண் நேரு.எம்பி அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் பொங்கல் வைத்து உரியடி போட்டியை தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் கி.ஆ.பெ விசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், மேயர் அன்பழகன், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு ஆகியோர் பங்கேற்று பொங்கல் பானையில் அரிசியிட்டு சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர். விழாவில் கண்களை கட்டிக்கொண்டு பொங்கல் பானை உடைக்கும் போட்டியில் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர்கள் மருத்துவர்.உதய அருணா மற்றும் மருத்துவர்.அருண் ஆகியோர் பங்கேற்று பானையை உடைத்தனர். அதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவ மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
