திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டு விழாவானது வெகு விமர்சையாக விறுவிறுப்பாக நடைபெற்றது. திருச்சி கலெக்டர் சரவணன் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். முதலில் சூரியூர் கோவில் காளை காசி அவிழ்த்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. இப்போட்டியில் திருச்சி திண்டுக்கல் தேனி அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை சிவகங்கை தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 668 மாடுகள் மற்றும் 334 வீரர்கள் பங்கேற்றனர்.

மாடுபிடி வீரர்களுக்கு அடங்க மறுத்த காளைகளுக்கும், சீறி பாய்ந்த காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் சில்வர் பாத்திரங்கள், வேஷ்டி சேலைகள், டைனிங் டேபிள்கள், பரிசு பொருட்கள் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியை காண உள்ளூர் மற்றும் வெளியூர் வெளி நாட்டினை சேர்ந்தவர்கள் வருகை தந்து கண்டு களித்தனர். மேலும் போட்டியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், உள்ளிட்டவர்கள் போட்டியை காண வருகை தந்தனர்.

இப்போட்டியில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரின் காளை சின்ன கொம்பன் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது. போட்டியில் இறுதியில் 12 காளைகளை அடக்கிய திருச்சி சூரியூரைச் சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கிய கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவதாக 11 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை சேர்ந்த யோகேந்திரன் மற்றும் மூன்றாவதாக 7 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை நல்லதங்கால் பட்டியை சேர்ந்த கார்த்தி ஆகியோருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 63 பேர் காயமடைந்தார். இதில் 9பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

