சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜ, பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ந் தேதி முதலாவது பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, டிடிவி தினகரன், வாசன், அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அடுத்தக்கட்டமாக தே.ஜ. கூட்டணியை ஆதரித்து, மார்ச் 1ந் தேதி மதுரையில் பிரதமர் மோடி, பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது, திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ந்தேதி வேலுாரில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மோடியின் கூட்டங்களில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அதனால், புதிதாக இணைய உள்ள கட்சித் தலைவர்களும் மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் மோடியின் மதுரை மற்றும் வேலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க பாஜ சார்பில், மத்திய இணையமைச்சர் எல். முருகன் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 11ந் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரச்சார பொது கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். அன்றைய தினமே தஞ்சாவூரிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படுவதாக உறுதிப்படுத்தாத தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் இடம் குறித்து தேர்வு நடைபெற்றது திருச்சியை அடுத்த மாத்தூர் சுற்றுசாலை அருகில் பிரதமர் மோடி பங்கேற்கோ பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த இடத்தை இன்று மதியம் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட செயலாளர்கள் ஒண்டிமுத்து,அஞ்சா நெஞ்சன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்