திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வருகின்ற மார்ச் 9-ம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து கழக முதன்மைச் செயலாளரும்,நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு இன்று மாநாட்டு திடலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.. தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாடு, “தமிழ்நாடு வெல்லும், தமிழ்நாடு தலைமை ஏற்கும்” என்ற இலக்கை முன்வைத்து எழுச்சியுடன் தயாராகி வருகிறது. மாநாடு நடைபெறும் திடல் மற்றும் தொண்டர்களுக்கான வசதிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்… சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் மிக பிரம்மாண்டமான முறையில் மாநாட்டுத் திடல் அமைக்கப் பட்டுள்ளது. திடலில் மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக 10 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுவதால், அதற்கேற்ப கூடுதல் இடவசதிகளும் செய்யப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொண்டர்களுக்குத் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவும், போதிய கழிப்பறை வசதிகளும் மாநாட்டுத் திடலிலேயே சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகத் திடல் முழுவதும் வலிமையான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு மதியம் 3 மணி அளவில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும். முதலமைச்சர் வருகைக்கு முன்பாக, பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் அப்துல் குத்தூஸ் குழுவினரின் எழுச்சிமிகு இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை சுமார் 5.30 மணி அளவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகை தந்து, கழக இரு வண்ண கொடியை ஏற்றி வைத்துப் சிறப்புறையாற்றுகிறார்.

மாநாட்டிற்கு சுமார் 24,000 வாகனங்கள் வரும் என காவல்துறை கணித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் சிரமம் ஏற்படாத வண்ணம் காவல்துறை சார்பில் சிறப்பான போக்குவரத்து மாற்றங்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கான அழைப்பு என்பது குறித்து கழகத் தலைவரே முடிவெடுப்பார். திருச்சி மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், இந்தச் சிறுகனூர் மாநாடு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 இல் இதே இடத்தில் தான் ஏழு விதமான சூழ்நிலை முதலமைச்சர் அறிவித்து ஆட்சியில் அமர்ந்தார். இந்த மாநாட்டிலும் பல நல்ல அறிவிப்புகள் வரும் என பேசினார்.. இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் துரைராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
