*கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் இன்றும் நாளையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மூடப்பட்டன – சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மட்டும் பக்தர்களை உள்ளே அனுமதித்த கோவில் நிர்வாகம்.*
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. மேலும் ஆடி கிருத்திகையை, ஆடி பதினெட்டு முன்னிட்டு, கோயில்களில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், இன்று மற்றும் நாளை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில், வயலூர் முருகன் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோயில்கள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு கடந்த 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஆறு கோவில்கள் இன்றும் நாளையும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லாமல் கோவிலின் நுழைவாயில் முன்பு அரசின் அறிவிப்பை பதாதைகளை எழுதி வைத்தனர் இதனால் பெரும்பாலான பொதுமக்கள், பக்தர்கள் கோவிலுக்கு வருபவர்கள் கோயில் நுழைவாயிலில் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இதேபோன்று சுற்றுலாத் தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் பின்பகுதியில் கதவை திறந்து வைதத்து சாமி தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர். இதனால் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்ற அச்சத்தால் இன்றும் நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று திருச்சி கலெக்டர் சிவராசு அறிவித்திருந்தும், இதனை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இன்று காலை முதல் சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் கூட அணியாமல் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு உள்ளே அனுமதித்தனர். இதனை கண்ட சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர் மேலும் இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் கேட்டபோது நான் விசாரிக்கிறேன் என்று மழுப்பலாக கூறி போனை துண்டித்து விட்டார்.