திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சாலையோர உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது.
இந்த விழிப்புணர்வு கூட்டம் திருச்சி உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் உணவு பொருள் சார்ந்த கடைகளை இயக்கி வரும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சாலையோர கடைகள் நடத்துபவர்கள் கட்டாயம் பதிவு உரிமம் பெற்றிருக்க வேண்டும், நுகர்வோர்கள் அனைவரும் சாலையோர உணவு குறித்த சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த அரசின் வழிமுறைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சாலையோர கடைகளில் உணவு அளிக்கும் போது விற்பனையாளர்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொண்டு தலை கையுறை அணிந்து உணவளிக்க வேண்டும் மேலும் பேப்பர் மற்றும் தட்டு களில் அளிக்காமல் சுகாதார முறையில் இலைகளில் உணவளிக்க வேண்டும், சமைத்த உணவுகளை திறந்து விற்பனை செய்வதால் பாதுகாப்பான முறையில் மூடி விற்பனை செய்ய வேண்டும், இப்படி திறந்து இருப்பதால் சாலையோரங்களில் சாக்கடைகளில் இருக்கும் கரப்பான் பூச்சிகள் எலிகள் சிறு சிறு பூச்சிகள் சாப்பாட்டில் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்று இக்கூட்டத்தில் வந்திருந்த சாலையோரங்களில் உணவு பொருள் சார்ந்த கடைகளை இயக்கி வரும் வியாபாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருச்சி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.
கடந்த மூன்று மாதங்களில் திருச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 125 கடைகளை சீல் வைத்துள்ளோம். அதேபோல் டீ தூள்களை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துதான் வருகிறோம் திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யும்போது மிக மிக மோசமான உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை தொடர்ந்து பறிமுதல் செய்து வருகிறோம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சமையல் எண்ணையை மறுசுழற்சி செய்யும் திட்டம் தற்போது திருச்சி மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து சாலையோர உணவு வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் பயன்படுத்திய எண்ணெயை சேமித்துவைக்க ஒரு டின் ஒன்றை வழங்க உள்ளோம். அதை பயன்படுத்தி சமைத்த எண்ணையை ஊற்றி வைத்து பின் அதனை தனியார் நிறுவனங்கள் பணம் கொடுத்து வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செக்கு எண்ணெய் என்று கூறிக்கொண்டு அதில் பாமாயிலை கலப்படம் செய்த பலர் விற்பனை செய்து வருகின்றனர் இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்து வருகின்றனர் மேலும் தின்பண்டங்களை பொறுத்தவரை தேதி இல்லாமல் பாக்கெட் போட்டு பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அவ்வாறு விற்பனை செய்யப்பட்டால் அந்தப் பொருளின் உற்பத்தி அவரை அழைத்து அபராதம் விதிப்பது அவரிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற்று கொள்கிறோம்.மேலும் விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வரும் கடைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. என்று பேட்டியளித்தார்.
.