திருச்சி சிறப்பு முகாமில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பலனிக்காத நிலையில் 15க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும், வயிற்றை கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் மற்றும் வங்கதேசம், நைஜீரியா,சூடான், பல்கேரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 30 பேர் என 100- க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பொய் வழக்கில் கைது செய்துள்ள தங்களை, வழக்குகளில் விடுதலை பெற்றும், தண்டனைக் காலத்திற்கு மேலாக தங்களை சிறப்பு முகாம் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் எனவும், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளதாகவும், கொடுமையான கொரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும், குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் தொடர்ந்து பல்வேறு கட்ட உண்ணாவிரத போராட்டங்களையும் கடந்த மாதம் நடத்தி வந்தனர்.மேலும் தங்களை விடுவிக்க வலியுறுத்தி முகாமிற்குள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கடந்த வாரம் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 1 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பலனிக்காத நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் 15க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் வயிற்று பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க காவல் துறையினர் ஏற்பாடு செய்ததை அடுத்து உடனடியாக அவர்களை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தண்டனை காலம் கடந்தும் தமிழக அரசு தங்களை விடுதலை செய்யவில்லை என சிறப்பு முகாமில் உள்ள அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.