மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க கோரி கடந்த 9 மாதங்களாக தலைநகரம் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் l கூட்டு நடவடிக்கை குழு, சுதந்திர விவசாயிகள் போராட்ட குழு(கோல்டன்) மற்றும் பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்த உள்ள *கன்னியாகுமரி முதல் டெல்லி கோட்டை வரை வாகன பிரச்சார பயணம்* செல்வது சம்பந்தமாக ஆலோசிக்கும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இன்று நடந்தது.

இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் மேகராஜன், மாநில செய்திதொடர்பாளர் பிரேம்குமார், மாநில இணை செய்தி தொடர்பாளர் வரப்பிரஹாஸ், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் வாழையூர் பொன்னுசாமி, மாவட்ட செயலாளர் மறவனூர் செந்தில்குமார், நகர் ஜான் மெல்கியோராஜ், மேட்டுபட்டி செல்வம் ஆகியோரின் முன்னிலையில் வகித்தனர்.

*கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றபட்டது*

 

வாகன பயணம் கன்னியாகுமரி முதல் புதுடெல்லி வரை அக்டோபர் 2ந்தேதி (காந்திஜெயந்தி அன்று) கன்னியாகுமரியில் புறப்பட்டு நவம்பர் 26 டெல்லி சென்றடைவது, மூன்று வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்கவில்லை என்றால் டெல்லியிலே சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு தனிநபர் இன்சூரன்ஸ் வேண்டும், 2016-ல் பயிர் கடன் வாங்கிய பெரிய விவசாயிகளின் கடனை மத்திய காலகடனாக மாற்றி விட்டு தற்பொழுது கடன் தள்ளுபடி செய்யாமல் இருப்பது விவசாயிகளிடம் மன வருத்தத்தை தருகிறது. எனவே, மேற்படி கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி-அய்யாறு இணைக்க வேண்டும். அனைத்து கிளை வாய்கால்களையும் தூர்வார வேண்டும்.

மதுவை குடித்து விட்டு மதுபாட்டில்களை விவசாய நிலங்களில் வீசி எறிவதால் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் நிலத்தில் இறங்கி விவசாய பணிகளை செய்ய முடியவில்லை. மதுவை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்காமல் மக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தயார் செய்து தமிழக அரசு விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *