திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகளை ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் அறிவித்த ரூ 10 ஆயிரத்தை அனைத்து வியாபாரிகளுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும்.
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தின்படி அதே இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்துதை கைவிடவேண்டும். சாலையோர வியாபாரிகள் முறைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு சட்டம் குறித்து அரசு அதிகாரிகள் காவல் துறையினருக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் நீதிமன்றம் மூலம் பெற்றிருக்கும் தடை ஆணையை உறுத்து ஆணைகளை மதித்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
சிஐடியூ திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக் கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று மாநகராட்சி அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட தரைக்கடை சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன். தரைக்கடை சங்க செயலாளர் செல்வி, பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் அமானுல்லா, நத்தர் அலி, அப்துல்ரஹீம், ஷேக் முகைதீன், சுப்புரெத்தினம், மணிகண்டன், கோபால், புஷ்பா கரன், கோவிந்தன், சுரேஷ் ,கணேசன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்