திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காட்டு புதூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சாமியார் பாளையம் செல்லும் வழியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள் ஊத்துக்குளி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்பசாமியின் உடலை மீட்டுள்ளனர். அப்போது அவருடைய சட்டைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது. அந்தக் கடிதத்தில் கூனம்பட்டி பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவரிடம் ரூபாய் 35 ஆயிரம் கடனாக பெற்று இருந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பாக ரூபாய் 24 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் எழுதப்பட்டிருந்தது.
மேலும் கணேசன் ரூபாய் 1 லட்சம் தரவேண்டும் என்று கூறி தனது ஜாதியின் பெயரை சொல்லி அவமானப்படுத்தியதோடு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் எனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து கருப்பசாமியின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.