தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் ஆணைக்கிணங்க மாநில ஒருங்கிணைப்பாளராக டைமன் ராஜா புதியதாக பொறுப்பேற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிளை சங்கத் தலைவர் ரவி முத்துராஜா தலைமை தாங்கினார். செயலாளர் பாபு, பொருளாளர் கணேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா பேசுகையில்:-
ஆட்சிகள் மாறலாம் ஆனால் காட்சிகள் மாறாது. அது போல தான் நமது பேரவை ஒரு நாளும் நமது கொள்கையில் இருந்து மாறாது, பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டி சரக்கு சேவை வரியை எதிர்த்து வருகிறது. குறிப்பாக ஒரு சில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வியாபாரிகளை அச்சுறுத்தியும், துன்புறுத்தியும் வருகின்றனர். இதுபோன்ற அதிகாரிகளின் தவறுகளால் எல்லோருடைய பேரும் கெட்டுப் போகிறது. இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்
நிச்சயமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் சூழல் ஏற்படும் என்பதை இந்த அரசாங்கத்துக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மக்களுக்காகவும் வியாபாரிகளுக்கும் பாடுபடும் என்ற நோக்கத்துடன் இந்த ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது என தெரிவித்தார். இறுதியாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைசாமி நன்றி கூறினார்.