மக்களை ஏமாற்றி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த ஆயுசு நூறு நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தரக்கோரி பணத்தை இழந்து ஏமார்ந்த முதலீட்டாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ரிஜிஸ்டர் தபால் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் பணத்தை மீட்டுத்தரக் கோரியும் ஏமாற்றிய நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தபால் அனுப்பினர்.
தபால் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தில்லைநகர் பகுதியில் இயங்கிவந்த ஆயுசு நூறு என்ற நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் மளிகை பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதாகவும், ரியல் எஸ்டேட் துறையில் நிலம் வாங்கி விற்பனை செய்வதாகவும், பயணம் என்ற செயலி (ஆப்) மூலம் அனைத்து வித பயண வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் மேலும் தமிழ்நாடு முழுவதும் ஆயுசு நூறு சார்பில் மளிகை கடைகள் திறக்க உள்ளதாக கூறி பொதுமக்களிடமிருந்து முதலீட்டாக ரூபாய் 1000 முதல் 50 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு தற்போது ஆயுசு நூறு நிறுவன உரிமையாளர்கள் 1000 கோடி பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் தொழில் துவங்க முதலீடாக செலுத்திய பணத்தை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் சில தினங்களுக்கு முன் மனு அளித்தனர். அந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று காலை திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ஆயுசு நூறு நிறுவனத்தின் மூலம் பணத்தை இழந்து ஏமாந்த முதலீட்டாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ரிஜிஸ்டர் தபால் மூலம் தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தலைமை செயலாளர், அமைச்சர்கள், பாரதப் பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் காவல்துறையினருக்கு கோரிக்கை தபால் அனுப்பினர்.