நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவர், நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தற்கொலை முயற்ச்சிக்கு, பணிச்சுமை காரணமாகவும் உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாகவும் தான் மகேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவில் காவலர்களின் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் போக்குவரத்து காவலர்களுக்கு மிகுந்த பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், ஆட்சியர் குடியிருப்பு, ஏராளமான கல்வி நிலையங்கள் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் இயங்கும் பகுதி என்பதால் பாளையங்கோட்டை எப்போதும் நெருக்கடியுடன் காணப்படும். ஆனால், பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் துறையில் மிக குறைந்த அளவிலேயே காவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இதற்கிடையில், பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் அருணாசலம், தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரை சென்றது. இருப்பினும் அடுத்தடுத்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.