திருச்சி மாநகரில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துகொண்டிருந்தது. அதனடிப்படையில் தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி போலீஸ் ஏசி சுந்தரமூர்த்திக்கு இன்று காலை பாலக்கரை அரசமர பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து இளைஞர்களுக்கு விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசாருடன் அதிரடியாக ஆட்டோ ஸ்டாண்டில் ரெய்டு மேற்கொண்டார்.
அப்போது திருச்சி ஏர்போர்ட் காவிரி நகர் பகுதியை சேர்ந்த சித்திக் என்பவரின் மகன் ராஜ முகமது என்பவரின் ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 1/4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஆட்டோ ஓட்டுனர் ராஜாமுகமதை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அதனை விற்ற பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோக்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்:-
இந்த ஆட்டோ ஸ்டாண்ட் கடந்த பல வருடங்களாக இங்கு இயங்கி வருகிறது. மேலும் காஜா பேட்டை மெயின் ரோடு, சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு, மணல் வாரி துறை மெயின் ரோடு, துரைசாமிபுரம் மெயின் ரோடு, கீரக்கொல்லை மெயின் ரோடு ஆகிய சாலைகளை இணைக்கும் முக்கிய பகுதியில் இந்த ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் சிறப்பாக சேவையாற்றி வரும் ஆட்டோ ஸ்டாண்டாக உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டோ ஸ்டாண்டில் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்கள் விற்ற ஆட்டோ ஓட்டுனரை போலீஸ் ஏசி சுந்தரமூர்த்தி அதிரடியாக கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளார் அவருக்கு பொதுமக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். என கூறி நெகிழ்ச்சி அடைந்தனர்.