திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான தெருக்கள் மற்றும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் குறித்து மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
அதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை வளர்ப்போர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கால்நடைகளை கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்துக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.
மேலும் தெருக்களிலும் சாலைகளிலும் கால்நடைகளை சுற்றி திரிய விட்டால் மாநகராட்சி ஊழியர்கள் கால்நடைகளை பிடித்துச் சென்று கால்நடை உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
ஆனால் மாநகராட்சியின் எச்சரிக்கை அறிவிப்பை கண்டுகொள்ளாமல் “நீ என்ன சொல்றது – நான் என்ன கேட்கறது – என மாநகராட்சிக்கு சவால் விட்டபடி பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விட்ட கால்நடை உரிமையாளர்கள்.
குறிப்பாக திருச்சி தலைமை தபால் நிலையம் பிரதான சிக்னலில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிகின்றன. மேலும் மாநகராட்சியை அழகுபடுத்துவதற்காக சென்டர் மீடியன் மற்றும் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த செடிகள், மரக்கிளைகளை மாடுகள் மேய்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.