தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக திருச்சி விமான நிலையம் அருகே உள்ள ஜே கே நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி மழைநீர் குளம்போல் காட்சியளித்தது. மேலும் இந்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வீட்டின் முதல் மாடியில் தங்கியிருந்த பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை நீர் சூழ்ந்த தன்னுடைய வீட்டிலேயே கணவர் மற்றும் தாயாருடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத தன் தாயாரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்வதற்காக தமிழக அரசு அறிவித்த மழை தொடர்பான உதவி எண்ணை அழைத்து தகவல் தெரிவித்தார். அதன்படி திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை நீர் சூழ்ந்த வீட்டிற்கு உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் அதிநவீன ரப்பர் ஸ்ட்ரெச்சர் மூலம் நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்த மூதாட்டியை முதல் மாடியில் இருந்து பத்திரமாக மீட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு சேர்த்தனர்.
விரைவாக வந்து மூதாட்டியையும் அவரது மகள் மற்றும் மருமகனை திருச்சி தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.