கடந்த சில நாட்களாக திருச்சி மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 39 40 41 42 ஆகிய வார்டுகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகள் தெருக்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு மலேரியா காய்ச்சல் போன்ற தோற்று நோய்கள் பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த 5- வார்டுகளில் மாநகராட்சி அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிபிஐஎம் பகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திருச்சி மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமானிடம் மனு அளிக்க வந்தனர்.
மேலும் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 39 40 41 42 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தெருக்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது அதனை உடனே சரி செய்து தரக் கோரியும், தேங்கிய மழைநீர் வடிகால் செய்து தரக் கோரியும், தேங்கிய மழைநீரில் கொசு மருந்து அடித்து நோய் வராமல் தடுத்திட கோரியும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது அதனை உடனே பம்புசெட் மோட்டார் மூலம் அகற்ற கோரியும், பழுதடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை அமைத்து தரக்கோரியும், மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர கூறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர்.