அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாது, கொரோனா பரவல் காலகட்டத்தில் தமிழக அரசின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அம்மா மினி கிளினிக்கில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் 1800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் திருச்சியில் மட்டும் 58 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த மினி கிளினிக்கில் நாங்கள் 2 மாதங்கள் மட்டுமே பணியாற்றினோம்.
பின்னர் கொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பின் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளுக்கும், தலைமை மருத்துவமனைக்கும், சிலர் சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக பணிமாற்றம் செய்யபட்டனர். தற்போது வரை 8 மாத காலமாக தீவிர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, காய்ச்சல் பிரிவு, தடுப்பூசி முகாம், கொரோனா கட்டுப்பாட்டு அறை ஆகிய இடங்களில் பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் எங்கள் பணி ஒப்பந்தம் நிறைவடைய இருப்பதாக அறிகிறோம். எனவே எங்கள் பணிநியமனத்தை நிரந்திரம் செய்ய கோரி கேட்டுகொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவிக்கையில்:- டிசம்பர் 31-ஆம் தேதி வரை பணிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்களை அழைத்து சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.