தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ 3000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் 5000 ஆக உயர்த்தி வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமை தாங்கினார், மாநில துணை செயலாளர் புஷ்பநாதன் முன்னிலை வகித்தார். மறியல் போராட்டத்தை திருச்சி மாவட்ட தலைவர் ஜெயபால் துவக்கி வைத்து பேசுகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரூ.3800 தெலுங்கானாவில் ரூ. 3016 வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 1000/ ரூபாய் வழங்கி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், தமிழக முதலமைச்சரும் உடனடியாக மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர் முன் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.