108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந் தாண்டகத்துடன் துவங்கியது – பின்னர் நாள்தோறும் பகல் பத்து திருவிழாவில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கடந்த 14ஆம் தேதி காலை நடைபெற்றது – இதனை அடுத்து இராப்பத்து திருவிழா துவங்கி நாள்தோறும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பரமபத வாசல் வழியாக ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்.
8 ஆம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோயிலின் நான்காம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் மிக விமர்சியாக நடைபெற்றது.
நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார் – அப்போது மணல்வெளியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு ரெங்கா ரெங்கா கோவிந்தா கோவிந்தா என்று முழங்கி தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
இராப் பத்து பத்தாம் திருநாளில் தீர்த்தவாரி, பின்னர் நம்மாழ்வார் மோட்சத்துடன் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி பெருந் திருவிழா நிறைவு பெறுகிறது.