திருச்சி காந்தி மார்க்கெட் நுழைவாயில் அருகே உள்ள டீக்கடையில் இன்று காலை விற்பனை செய்வதற்காக பலகாரங்கள் சுட்டுக் கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டரில் இருந்து கேஸ் லீக்கேஜ் ஆகி தீ பற்றி எரிந்தது. மேலும் மின் ஒயரில் பட்டதில் தீ கடையின் மேற்கூரையில் பட்டு அருகிலிருந்த கடைகளில் தீ பரவ தடங்கியது . கடை ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்ட போது மேலும் தீ கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் பரவியதால் திடீரென அதிக சத்தத்துடன் வெடித்தது.
இதில் கடை ஊழியர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். மேலும் தீ அருகிலிருந்த பாதாம் கடை, டீக்கடை, செல்போன் கடை என 7 கடைகளில் தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது. உடனடியாக இந்த தீ விபத்து குறித்து கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் கடைகளில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர்.
இதில் 5 கடைகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின 2 கடைகளில் தீப்பற்றி எரிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடியற்காலையில் நடந்த தீ விபத்தால் காந்தி மார்க்கெட் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.