திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சேற்றுக் குளியல் குளத்தில் கோவில் யானை அகிலா உற்சாக குளியல் போட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலா என்ற யானை கடந்த 11 வருடங்களாக இறைப்பணி செய்து வருகிறது. யானை அகிலா குளிப்பதற்காக கோவில் வளாகத்தில் உள்ள நாச்சியார் தோப்பு பகுதியில் 20 அடி நீளம், 6 அடி அகலம், 6 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் கொண்ட குளியல் குளம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

 

இந்நிலையில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் இந்து சமய அறநிலைத்துறை அறிவுறுத்தலின்படியும் கோவில் வளாகத்தில் ஏற்கனவே இருந்த வரும் நீச்சல் குளம் அருகில் யானை அகிலா சேற்றில் குளிப்பதற்காக ரூ 50 ஆயிரம் மதிப்பீட்டில் 1200 சதுரடியில் சேற்றுக் குளியல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு களிமண் கொட்டப்பட்டு, 100 கிலோ உப்பு, நீர் சேர்க்கப்பட்டு சேறாக மாற்றப்பட்டது. பின்னர் யானை அகிலா அந்த சேற்று குளத்திற்குள் இறக்கப்பட்டது.

சேற்று குளத்தை கண்டவுடன் மகிழ்ச்சி அடைந்த யானை அகிலா சேற்றுக்குள் தனது துதிக்கையால் அடித்தும், புரண்டும், தன் மீது சேற்றை அள்ளி போட்டுக்கொண்டது விளையாடி மகிழ்ந்தது. இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் கூறும்போது மாதமிருமுறை யானை சேற்றில் குளித்தால் அதனுடைய உடம்பிலுள்ள சுரப்பிகள் நன்றாக இருக்கும் என வன விலங்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதன்படி இன்று வெள்ளோட்டமாக அகிலா யானையை சேற்று குளியலுக்கு தயார் படுத்தினோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *